பாஜக.வால் டெபாசிட் கூட வாங்க முடியாது: உதயநிதி விமர்சனம்..

By 
tep

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளரை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்கரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை துரை வைகோவை  5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெறி பெற வைக்க வேண்டும். அப்படி வெற்றி பெற வைத்தால் மாதம் இரண்டு முறை நான் இந்த தொகுதிக்கு வந்து என்னென்ன மக்களுக்கு தேவையோ அதை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.

நாம் அனைவரும் பெரியார், அண்ணா, கலைஞரின் பேரன்கள் தான். கொள்கை பேரன்கள். நம் லட்சியம் மோடியை தோற்கடிப்பது தான். திருச்சியில் 200 கோடியில் சிப்காட், 6 கோடியில் காவேரி பாலத்தின் பராமரிப்பு பணி, கூட்டு குடிநீர் திட்டம், 42 சாலைகள் புனரமைக்க்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தவிர 105 கோடி மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம், 11 கோடி ஸ்ரீரங்கம் பேருந்தி நிலையம், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என நம் முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். நிச்சயம் அதை நிறைவேற்றி தருவார். நம் முதலமைச்சர் தவழ்ந்து போய் யார் காலையும் பிடித்து முதலமைச்சராகவில்லை. அவர் மக்கள் தேர்ந்தெடுத்து முதலமைச்சரானார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

ஒரு திட்டத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என பெண்களை பார்த்து தான் கற்று கொள்ள வேண்டும். விடியல் பயண திட்டத்தை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு. தமிழ்நாட்டில் 460 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்சியில் மட்டும் 21 கோடியே 45 லட்சம் முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தான் திராவிட மாடல்.

பெண்கள் விடுதலைக்காக போராடியவர் தான் தந்தை பெரியார். பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் அண்ணா. சொத்தில் சம பங்கு வழங்கியவர் கலைஞர். அவர் வழியில் நம் முதலமைச்சர் பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அதே போல காலை உணவு திட்டம் செயல்படுத்தி உள்ளார். இதை தெலங்கானா, கர்நாடகாவில் செயல்படுத்தி உள்ளார்கள். ஒட்டுமொத்த நாட்டுக்காக முன்னுதாரனமாக இருப்பது தான் திராவிட மாடல். இந்த திட்டம் தற்போது கனடாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு அது வரவில்லை நான் வாக்குறுதி கொடுக்கிறேன். இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கும் வந்து சேரும். கேஸ் சிலிண்டர் விலையை 800 ஏற்றி விட்டு தேர்தலுக்காக 100 ரூபாய் மோடி குறைத்துள்ளார். ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கேஸ் சிலிண்டர் ரூ.500 க்கு வழங்கப்படும், பெட்ரோல் ரூ.75 க்கும் டீசல் 60 க்கும் கொடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் இவையெல்லாம் நடக்க வேண்டுமெனால் அது மக்கள் கையில் தான் உள்ளது.

பத்தாண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார் ஆனால் 500, 1000 ரூபாயை தடை செய்து மக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார். மோடி நன்றாக வடை சுடுவார் அதை அவரே சாப்பிட்டு விடுவார். கொரொனா காலத்தில் ஒளி, ஒலி எழுப்ப கூறினார் மோடி. ஆனால் தமிழ் நாடு முதலமைச்சர் கொரொனா காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார்.

கொரொனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தி கொண்டவர்கள் தமிழ்நாட்டு மக்கள் தான். நம் முதலமைச்சர் தேர்தல் வாக்கிறுதி அளித்ததை நிறைவேற்றினார். ஆனால் மோடி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 2019 ஆம் ஆண்டு கட்டப்படும் என கூறினார்கள். ஆனால் ஒரே ஒரு செங்கலை தான் வைத்துள்ளார்கள். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை 10 மாதங்களில் கட்டியுள்ளோம். 

மோடி இன்னும் 15 நாள் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் பா.ஜ.க வால் டெபாசிட் கூட வாங்க முடியாது. நாம் ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திருப்பி தருகிறார். ஆனால் உத்தரபிரதேசத்திற்கு மூன்று ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகிறார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் முதலமைச்சர் வழங்கி உள்ளார். ஆனால் ஒன்றிய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை.

அ.தி.மு.க.வை வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை கொண்டு பயமுறுத்தினார்கள். அதனால் பயந்து அவர்களும் பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருக்கிறார்கள். ஆனால் நம்மை யாரும் அச்சுறுத்த முடியாது. நாம் யாருக்கும் அஞ்ச மாட்டோம். நமக்கு மரியாதை கொடுத்தால் நாமும் கொடுப்போம். ஜீன் 4 ஆம் தேதி 40 க்கு 40 வெற்றி பெற்று கலைஞருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டி அடித்து விடியல் ஆட்சி கொடுத்தது போல் வரும் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியல் ஆட்சியை தர வேண்டும் என்றார்.

Share this story