நடிகை விந்தியா பற்றி அவதூறு கருத்து : திமுக பேச்சாளர் மீது வழக்கு..

By 
vin1

அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் பேச்சாளராகவும் இருப்பவர் நடிகை விந்தியா. இவரைப் பற்றி தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விந்தியாவின் சார்பில் அ.தி.மு.க. சட்ட ஆலோசகரும், வக்கீலுமான இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் குடியாத்தம் குமரன் பேசியிருந்த வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.

இது பற்றி மகளிர் ஆணையம் ஆய்வு செய்தது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தி.மு.க. பேச்சாளரான குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து குடியாத்தம் குமரனை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குடியாத்தம் குமரன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருகிறார். தி.மு.க. பேச்சாளரான அவர் தனது ஊர் பெயருடனேயே பேச்சாளராக மேடைகளில் பேசி வருகிறார். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Share this story