சிபிசிஐடியே திமுக அரசின் கைக்கூலிதான் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எச்.ராஜா சாடல்..

By 
hraja1

சிபிசிஐடியே திமுக அரசாங்கத்தின் கைக்கூலியாக இருப்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோருவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்த அரசாங்கம் தீய நோக்கங்கள் கொண்ட அரசாங்கம். சாராயத்தில் என்ன நல்லச் சாராயம், கள்ளச் சாராயம்? இந்த விவகாரத்தில் முதல் மூன்று மரணங்கள் நடக்கின்றன. இது தொடர்பான அறிக்கையை முதல்வருக்கோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ தெரியாமல் மாவட்ட ஆட்சியர் கொடுத்திருப்பாரா?

183 பேர் சிகிச்சையில் உள்ளனர், 58 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி இருக்கும்போது இந்த விவகாரத்தை மறைக்க நினைக்கும் இந்த அரசாங்கத்தின் நோக்கம் பழுதானது. அதனால்தான் பாஜக சிபிஐ விசாரணை கோரியது. சிபிசிஐடியே இந்த திமுக அரசாங்கத்தின் கைக்கூலிதான். தீய நோக்கங்கள் கொண்டவர்கள்தான் இந்த அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறார்கள்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகளை இதுகுறித்து பேச விடுவதே இல்லை. நெருப்புக் கோழி மண்ணைத் தோண்டி முகத்தை மறைத்துக் கொள்வதை போலத்தான் முதல்வர் செயல்படுகிறார். மற்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு முன்பே சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஒப்புக் கொண்டால் அவரது மடியில் கனமில்லை என்று அர்த்தம்.

கமல்ஹாசன் தமிழக அரசியலில் தேவையில்லாத ஒரு நபர். முன்பு இலவசங்கள் கூடாது என டிவியை உடைத்தவர், திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று அறிவித்தவர், இப்போது டார்ச் லைட்டை தொலைத்துவிட்டு திரிகிறார்” இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Share this story