முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்மீக தத்துவ ஞானிபோல பேசுகிறார்: அதிமுக விமர்சனம் 

By 
agan

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியின் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேசும்போது,

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரசில் சந்திரபிரியங்கா என்ற அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என்று முதலமைச்சர், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இந்த பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு உடனடி அனுமதி தரவில்லை என்பதற்காக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என நாராயணசாமி பேசுகிறார். 

தற்போது அந்த அமைச்சரின் பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே நாராயணசாமி முழு நேர அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வாரா? 

மேலும், பாஜக துணையுடன் புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சியில் எந்தவொரு நீண்டகால பயனளிக்கும் திட்டமும் செயல்படுத்தவில்லை. முதலமைச்சருக்கு பாஜக தலைமையால் முடிந்த அளவுக்கு தொல்லையை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இதை முதலமைச்சர் தான் உணர வேண்டும். பாஜகவின்  வேலையே தனது கூட்டணியில் உள்ளவர்களை முதலில் காலி செய்வது தான்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு ஆன்மீகத்திற்கும், மத வழிபாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்மீக தத்துவ ஞானி போல உளறுகிறார். இவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஐயர் இல்லாத எந்த கோவிலுக்காவது சென்று வழிபட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த சபாநாயகர் செல்வம் விசித்திரமாக உள்ளார். முதலமைச்சரை விட சூப்பர் முதலமைச்சரும் இவர் தான், உள்துறை அமைச்சரும் இவர் தான். சபாநாயகர் அதிகாரத்தில் ஆளுநர் கூட தலையிட முடியாது என கூறுகிறார். சபாநாயகர் அதிகார வரம்பு எதுவோ அதற்குள் ஆளுநர் தலையிட முடியாது தான். ஆனால் அதற்காக நமது சபாநாயகர் ஆட்டுக்குட்டி முட்டையிட்டது என கூறினால் அந்த சபாநாயகரை பார்த்து ஆட்டுக்குட்டி எப்படி முட்டையிடும் என யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எனவே சபாநாயகர் தனது அதிகாரம் வரம்பு எது என்பதை உணர்ந்து நடந்து கொள்வது நல்லது என்றார்.

Share this story