சென்னை மாநகரம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் வலைத்தள பதிவு

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்! கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா-ஊர் என்பதா-உயிர் என்பதா சென்னையை? சென்னை-ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
* திருநெல்வேலியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்சின் வணிக வளாகம், ஓசூரில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்சின் விற்பனை நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் மதுரை மாவட்டம், தொட்டிய பட்டியில் 72 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 84 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவிலும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 72 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாவட்ட அளவிலான சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.