முதலமைச்சரின் தங்கை அதிரடி கைது : காவல்துறை நடவடிக்கை..

தெலுங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக யுவஜன ஸ்ராமிக்க ரைத்து தெலுங்கானா கட்சியின் (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா சென்றார்.
வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக ஏற முயன்ற சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா போலீசாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.