இனிப்பு வழங்கி, மாணவர்களை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்

Chief Stalin welcomed the students by offering sweets

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு, இன்று (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறக்கப்பட்டன.

சுமார் 1½ ஆண்டு காலத்துக்கு பிறகு, மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தந்ததால், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு இன்று காலை நேரில் சென்றார்.

அவரை பள்ளிக்கூட வாசலில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளிக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

பள்ளிக்கூடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்ததை பார்த்த மாணவ-மாணவிகள் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

மு.க.ஸ்டாலினை பார்த்து 'வணக்கம், முதலமைச்சருக்கு எங்களது வணக்கம்' என்று மாணவ-மாணவிகள் இரு கை கூப்பி, வணங்கினார்கள். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் மாணவ- மாணவிகளுக்கு வணக்கம் தெரிவித்தபடியே வந்தார்.

'நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு நீங்கள் வருகை தந்துள்ளதால், உங்களை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மாணவ-மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

மாணவ-மாணவிகளும் முதலமைச்சரிடம் சகஜமாக பேசினார்கள். அப்போது மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களையும் வழங்கினார். 

பள்ளிக்கூடத்தில் இருந்த ஒவ்வொரு வகுப்பறைக்கும் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுமார் 10 நிமிட நேரம் மாணவ-மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று மாணவ- மாணவிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட், இனிப்புகள், பேனா, பென்சில், மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
*

Share this story