அண்ணாமலையுடன் மோதல்..! தமிழிசையை நேரடியாக எச்சரித்த அமித்ஷா?

By 
amit333

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. 25 தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் களமிறங்கிய பாஜகவினருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களை பாஜக தலைமை களம் இறக்கியது.  

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் மாநில தலைவரும் ஆளுநருமாக இருந்த தமிழிசை தென் சென்னை தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியிலும், எல்.முருகன் நீலகிரியிலும்,  கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் களமிறக்கப்பட்டனர். ஆனால் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் சற்று உயர்ந்ததே தவிர வெற்றி வாய்ப்பு எட்டாத நிலை தான் நீடித்தது.

இதற்குக் காரணம் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி முறித்துக்கொண்டது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டது.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 10 முதல்  20 தொகுதிகளையாவது வெற்றி பெற்றிருக்க முடியும் என பாஜகவினரே கூறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். தமிழிசைக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா ஆந்திரா வந்திருந்தார். விழா மேடையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷாவை சந்தித்து வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கே இருந்து செல்ல முற்பட்டார்.  

உடனடியாக தமிழிசையை அழைத்த அமித்ஷா இறுகிய முகத்தோடு கைகளை விரல்களை உயர்த்தி எச்சரிக்கும் விதமாக தமிழிசையிடம் பேசினார். இதற்கு தமிழிசையும் ஏதோ பதிலளித்தார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத அமித்ஷா தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்று கூறுவது போன்ற வீடியோவானது வெளியாகி உள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக உட்கட்சி மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்றும், அப்படி ஏதேனும் மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசையை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  தற்போது இந்த வீடியோவை அண்ணாமலை ஆதரவு தரப்பினர் சமூக வலைதளத்தில் பரப்பி அண்ணாமலைக்கு பாஜக மேலிடத்தில் செல்வாக்கு அதிகமாக உள்ளது எனவும், அவரை யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என கூறி வருகின்றனர்

Share this story