பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் : அமைச்சர் உதயநிதி கிண்டல்
 

By 
udhayanidhi4

ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி, பேச்சை தொடங்கும்போதே பாரத் எனத் தொடங்கினார்.

மேலும், ஒவ்வொரு நாட்டின் பெயரை பிரதிநிதிப்படுத்தும் பெயர் பலகையில், பிரதமர் மோடியின் முன் பாரத் என வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாரத் நாட்டின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் இந்தியாவின் பெயர் ஏறக்குறைய  பாரத் என மாற்றமடைய உறுதியாகிவிட்டது எனக் கூறலாம்.

இந்த நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் பின்வருவாறு:-

கேள்வி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதே?

பதில்: வாழ்த்துகள் (சிரித்துக்கொண்டே) 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார்.

கேள்வி: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக உங்களையும், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் பா.ஜனதா துணைத் தலைவர் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனரே?

பதில்: திமுக கட்சியே அதற்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்களுக்கு ஆட்சியை பற்றி கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரித்தை விட கொள்கையே முக்கியம்.

கேள்வி: சனாதனம் தர்மம் ஒழிப்பு காரணமாக ஆட்சியே போனால் பரவாயில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: ஆம். எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை.

கேள்வி: மாநாட்டில் உங்களுடைய பேச்சு மட்டும் விமர்சனமாக்கப்படுகிறது. இது தனிமனித தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: தனி மனித தாக்குதல் கிடையாது. கொள்கை தாக்குதல். இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், "பா.ஜனதாவை விட்டுவிடுங்கள். என்னுடைய கேள்வி அ.தி.மு.க. பற்றியது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். கட்சியில் அண்ணா பெயர் உள்ளது. அண்ணாதான் அதிக அளவில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியுள்ளார். சனாதன தர்மம் விவகாரத்தில் அவர்களுடைய கருத்து என்ன? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.


 

Share this story