கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சதி : செல்லூர் ராஜூ விளக்கம்

By 
Conspiracy to cause chaos in the party Cellur Raju explanation

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. தலைவர்களை விமர்சனம் செய்வது போன்றும், சசிகலாவை ஆதரித்துப் பேசுவது போன்றும், சமூக வலைத் தளங்களில் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர். அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். 

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில வி‌ஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நள்ளிரவு பேச்சு :

சமூக வலைத்தளங்களில் நான் பேசுவது போன்று ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதில், உண்மையில்லை. நான் சமீப காலமாக, இரவு 10 மணிக்கு மேல் செல்போனை பயன்படுத்துவதே கிடையாது.

ஆனால், நள்ளிரவு 1 மணிக்கு நான் பேசுவது போல, மிமிக்ரி செய்து வி‌ஷமிகள் தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

என் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து, குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். 

சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான், நான் பேசாத கருத்துகளை என் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

தலைமை முடிவு செய்யும் :

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து, கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வலிமையோடு நடத்தி வருகிறார்கள்.

எனவே, தற்போதைய நிலையில் கட்சி தலைமைக்கு புதிதாக ஒருவரைக் கொண்டு வரத்தேவையில்லை. அந்த சூழ்நிலையும் எழவில்லை. 

என் குரலில் மிமிக்ரி செய்து, அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வி‌ஷமிகள் மீது கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Share this story