ஊழல் விவகாரம் : முதலமைச்சரின் மகள் ஆஜராக, அமலாக்கத்துறை சம்மன்..

kavita

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (9-ந்தேதி) நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்கதுறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மிக்கு கவிதா லஞ்சம் கொடுத்து உள்ளார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று, இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி சி.பி.ஐ. 7 பேர் மீது தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. தொடர்ந்து கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்தது.

இதன்படி, ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களை பெற்று பதிவு செய்தனர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது.

இந்த விசாரணையையொட்டி கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமலாக்க துறை அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.
 

Share this story