மாற்று அணியை உருவாக்க வேண்டும் : சீமான் யோசனை

seemn

சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானவர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் இன்னொரு சிறையில் அடைப்பது எப்படி? விடுதலையாகும். அவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி திருச்சியில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

காரணம் கேட்டால், ஆதிதமிழர் பேரவை சார்பில் கடிதம் கொடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். அப்படியானால் தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நாங்கள் கடிதம் கொடுத்தால் அனுமதி அளிக்காமல் இருந்து விடுவார்களா?.

ஆன்லைன் சூதாட்டத்தை அறிவுத்திறன் மேம்பாட்டுக்கான விளையாட்டு என்கிறார்கள். இதனால் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆகவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம்.

எங்களது தலைமையில் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் வருவார்களா? என்பதை இப்போது கூற முடியாது. ஏனென்றால் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகி விட்டது. இதனால் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் காசு கொடுத்து ஜெயிக்க வைப்பார்கள் என்று நினைப்பார்கள். எங்கள் கட்சி வாக்கு சதவீதத்தை 8-லிருந்து 15 ஆக உயர்த்தினால் தான் காசு கொடுக்காமலும் ஓட்டு பெற முடியும் என்ற நம்பிக்கையில் எங்களுடன் இணைவார்கள்.

பிரதமரை விமர்சிக்கவே கூடாதா?. அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?. அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு தண்டனை விதித்து இருப்பதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது.

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். கடந்த தேர்தலின்போதும், இதுபோல் ஒரு அணியை உருவாக்க முயற்சித்தார்கள். பின்னர் அந்த கூட்டணி சிதறுண்டுபோனது. இவ்வாறு அவர் கூறினார். 
 

Share this story