துணை மேயர் வீடு, அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல்: போலீஸ் விசாரணை..

By 
mar11

மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகத்தை தாக்கிய கும்பல் ஒன்று, வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த டூவீலர்களை அடித்து சேதப்படுத்தியது.

மதுரை மாநகராட்சி துணை மேயராக இருப்பவர் நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவரது வீடு ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் அருகிலுள்ளது. இன்று மாலை சுமார் 6.50 மணிக்கு வீட்டில் அவரும், அவரது மனைவியும் இருந்தனர். 

அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். கதவை திறக்காததால் அக்கும்பல் முன்பகுதி இரும்பு கேட்டை ஆயுதங்களால் சேதப்படுத்தினர். பின்னர் வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த புல்லட் உள்ளிட்ட இரு டூவீலர்களை அடித்து சேதப்படுத்திய அந்த கும்பல் , எதிரிலுள்ள அவரது அலுவலக கதவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து துணை மேயர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த மாநகர மார்க்சிஸ்ட் கட்சியினர் துணை மேயர் வீடு முன்பு திரண்டனர். 

இச்சம்பவத்தை கண்டித்து ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். போலீஸார் அவர்களிடம் சமரசம் பேசினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. துணை மேயர் நாகராஜன் கூறும்போது, 

‘இன்று மாலை அலுவல் நிமித்தமாக வெளியில் செல்வதற்கு தயாராக இருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். கதவை திறக்கவில்லை. ஒருவேளை திறந்து இருந்தால் வெட்டி உயிர்சேதம் ஏற்படுத்தி இருப்பர். சம்பந்தப்பட்டோர் மீது போலீஸ் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Share this story