250 லிட்டர் மெத்தனாலை அழித்தீர்களா.? ஆதாரம் எங்கே.? - குஷ்பு அதிரடி..

By 
250m

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 61 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய மகளிர் ஆணையம் அதன் உறுப்பினரான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று தனது விசாரணையை தொடங்கி உள்ளார். அதன்படி முதல் நிலையாக காவல் நிலையம் வந்த விசாரணைக் குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கின் பின்புலம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது வரை இந்த விவகாரத்தில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர், புதிதாக கைதானவர்கள் எத்தனை பேர். ஏற்கனவே கைதானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்ப பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளோம். இன்று தான் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இழப்பீடு தொடர்பாக எதுவும் கூற முடியாது. மேலும் நான் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இந்த விசாரணையை மேற்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஏற்கனவே உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த குஷ்பு, அவர்களிடம், காவல் நிலையம் அருகிலேயே பெண்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அப்போது காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என மாறி மாறி கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் குஷ்பு விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்களுக்கு எளிதான முறையில் கள்ளச்சாராயம் கிடைத்துள்ளது. சாராயம் குடித்ததற்கு பெண்கள் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. இது தொடர்பாக அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாராயம் குடித்தவர்களில் பலருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 

250 லிட்டர் மெத்தனாலை அழித்ததாக சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கான ஆதாரம் வேண்டும். இதுபோன்ற செயல்களை நீதிபதி முன்னிலையில் தான் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் நான் அழித்துவிட்டேன் என்று சொன்னால் அதனை எப்படி ஏற்க முடியும். ஒருவரிடம் 20 மில்லி மெத்தனால் இருந்தால் அவர் கைது செய்யப்பட்டு 90 நாட்களில் பெயில் வழங்கப்படும். ஆனால் இங்கு 250 லிட்டரை அழித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

கள்ளச்சாராயம் என்பது புற்றுநோயை போன்றது. அதனை வேரோடு பிடுங்கினால் மட்டுமே அதனை தடுக்க முடியும். இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்களை ஆண்கள், பெண்கள் என பிரித்து பார்க்க முடியாது. உயிர் அனைவருக்கும் பொதுவானது என்று தெரிவித்தார்.

Share this story