மத்திய அரசை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போராட்டம்..

DMK and allied parties protest against the central government.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், 19 கட்சிகள் பங்கேற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டம், கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது.

11 தீர்மானங்கள் :

இந்த கூட்டத்தில், புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, 

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, செப்டம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தமிழகத்தில் செப்டம்பர் 20-ந்தேதி (இன்று) மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் :

அதன்படி, பா.ஜனதா அரசை கண்டித்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. 

அதேபோல், கட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி, கனிமொழி ஆர்ப்பாட்டம் செய்தார்.

பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, குரோம்பேட்டை ராஜாஜி தெருவில் தனது வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு, இன்று காலை மத்திய அரசை கண்டித்து, கம்பத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இதில், காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று, கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this story