35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை, திமுக கடனாளியாக ஆக்கியுள்ளது : ஓபிஎஸ் கண்டனம்

DMK has made more than 35 lakh people indebted OPS condemnation

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 

2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தலின் போது, 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தலைப்புச் செய்தி என்று கூறி, இந்த வாக்குறுதியை தி.மு.க. தலைவரே வாசித்தார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலோ அல்லது தி.மு.க. தலைவர் தலைப்புச் செய்தியாக வாசித்தபோதோ எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தின்போது, ஒவ்வொரு மேடையிலும் தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்களால், இந்த வாக்குறுதி எடுத்துரைக்கப்பட்டது. 

முதலமைச்சரின் மகன் ஒருபடி மேலே சென்று, 'கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி. நாளைக்கே போய் வாங்கிடுங்க. வரப்போவது நம்ம ஆட்சி, நம்முடைய தலைவர் தள்ளுபடி செய்திடுவாரு' என்று கூறினார். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.

ஆனால், இன்று என்ன நிலைமை? நகைக் கடன் வாங்கியோரில் கிட்டத்தட்ட 75 சதவீதம் கடனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்து இருக்கிறது.

நகைக் கடன் தள்ளுபடி குறித்து அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து 64 ஆயிரத்து 726 பயனாளிகளின் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகைக்கடன் பெறத் தகுதி இல்லாதவர்கள்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அப்படியென்றால், வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே கடன் பெறத் தகுதியானவர்கள். 

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் 16 லட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பகுப்பாய்வுக்கு பின் அதுவும் இரண்டரை லட்சம் குறைந்துவிட்டது. அதாவது, தேர்தல் வாக்குறுதிப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நகைக்கடன், நிதிநிலை அறிக்கையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் எனக் குறைக்கப்பட்டு, தற்போது அது கிட்டத்தட்ட 4,500 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. 

இதைச் சரியாக கணக்கிடும்போது, இதற்கான தொகை இன்னும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நகைக்கடன் தள்ளுபடிக்கான தி.மு.க. அரசின் இந்த அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது. 

இவர்கள் கடனாளிகளாக ஆக்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம். இந்தச் செயல் நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம். வாக்களித்த மக்களை வஞ்சித்த தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. தலைவரும், தி.மு.க. நிர்வாகிகளும் மேடைக்கு மேடை பேசியதையும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியையும் நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர்.

ஆனால், இன்று பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர். 

பகுப்பாய்வு குறித்து தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை? பகுப்பாய்வு குறித்து ஏன் மேடைக்கு மேடை பிரசாரம் செய்யவில்லை? நகைக் கடனை வாங்கத் தூண்டும் வகையில், ஏன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது? என்ற கேள்விகள் தற்போது மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.

எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி, நகைக் கடனைத் தள்ளுபடி செய்து, அவர்களை சுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' என அவர் கூறியுள்ளார்.
*

Share this story