திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்..

By 
nam1

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் உள்ள பொம்மை தெருவை சேர்ந்தவர் அருண்லால். (வயது 51). இவர் ராசிபுரம் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா (வயது 40). இவர் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ரித்திகா (21) பெங்களுருவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளையமகள் மோனிஷா (16), 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அருண்லால் தனது குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு கீழ் தளம், மேல் தளம் கொண்டதாகும். அருண்லாலுடைய தாய் சுசிலா முன்னாள் கவுன்சிலர் ஆவார். வீட்டின் கீழ் தளத்தில் சுசிலா வசித்து வருகிறார். மேல்மாடியில் அருண்லால் தனது மனைவி தேவிபிரியா, மகள் மோனிஷாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சுசிலா வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்றிருந்தார். அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் வீட்டில் இருந்தனர். இன்று காலை வெகுநேரமாகியும், இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு லேசாக திறந்து கிடந்தது.

அவர் உள்ளே சென்று பார்த்தபோது கீழ் தளத்தில் அருண்லால் தாய் சுசிலா அங்கு இல்லை. இதனால் மேல்மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அருண்லால், தேவிபிரியா தம்பதி மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பக்கத்தில் அவரது மகள் மோனிஷா விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ராசிபுரம் டி.எஸ்.பி.செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அருண்லால்-தேவிபிரியா தம்பதி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என உடனடியாக தெரியவில்லை.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் தற்கொலைக்கு கடன் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்..தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story