தி.மு.க.வின் இரட்டை வேடம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ops77

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பு ஒரு நிலைப்பாடு என அனைத்திலும் இரட்டை வேடத்தை கடைபிடித்து வரும் தி.மு.க. அரசு, கல்வி கொள்கையிலும் இரட்டை வேடம் போடுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். தி.மு.க. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, புதியக் கல்விக் கொள்கையில் அதன் நிலைப்பாடு மாறிவிட்டது.

2021 அக்டோபர் மாதத்தில், மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணம் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மாநில அரசின் தேசியக் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறு வடிவமாகவே உருவாகிறது என்று தி.மு.க.வால் நியமனம் செய்யப்பட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார். இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையில் தி.மு.க.விற்கு உடன்பாடு இருக்கிறது என்பதும், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே என்பதற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் நாடகமாடியது என்பதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தான் தி.மு.க.வின் உண்மையான சுயரூபம்.

இந்தச் சூழ்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான உயர்மட்டக் குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின் பற்றப்படுமா என்பது குறித்தும், இது எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

Share this story