கவனச்சிதறலுக்கு இடமளித்து விடாதீர் : கட்சியினருக்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

By 
lin1

சனாதனம் பற்றிய விமர்சனம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு பிரச்சனையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

நாட்டில் நடைபெறும்-பற்றி எரியும் எந்தப் பிரச்சனைக்கும் வாய் திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள்.

சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்து விடக்கூடாது. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நாளும் வெறுப்பரசியலை ஊக்குவித்து, இந்தியத் திருநாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, அதை மறைக்க விளம்பர ஜாலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதைத் தான் நாம் அனைவரும் முனைப்பாக பரப்புரை செய்தாக வேண்டும். ரபேல் ஊழலும், அதானி முறைகேடுகளும் உலக சமுதாயத்தின் முன்னால் இந்தியாவைத் தலைகவிழ வைத்துவிட்டன.

* துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், * அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், * கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்,    * எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த 7 திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளன. விதிமீறல்கள் நடந்துள்ளன. நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறி உள்ளன என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 7.50 லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப்பார்க்கிறது பா.ஜ.க. மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மாநில மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற மக்கள் விரோத ஆட்சி ஒன்றியத்தில் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஒற்றை ஆட்சி என சர்வாதிகாரப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட ஆபத்தான முயற்சிகளைப் பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

பா.ஜ.க.வின் ஊழல்-மதவாத-எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
 

Share this story