கொடுக்கவே கூடாது; ஏன்னா செந்தில்பாலாஜி செல்வாக்குமிக்கவர்: அலறும் அமலாக்கத்துறை..

By 
lplpp

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த 7 மாத காலமாக சிறையில் உள்ளார். இந்தநிலையில் தனது அமைச்சர் பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து  ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,

நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருகிறார். வழக்கின் விசாரணையை துவங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கிறது. செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகல்  விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Share this story