திமுக அமைச்சர்கள் இனிமேல் எந்தெந்த சிறையில் இருப்பார்கள் என தெரியாது : அண்ணாமலை

தேனி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் பா.ஜ.க மாநில தலைவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
கம்பத்தில் சாகுபடியாகும் திராட்சை சுவை மிகுந்தது. ஆனால் தற்போது கஞ்சா விற்பனையின் தலைநகரமாக மாறியுள்ளது. ஆனால் இதைபற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் மாநில அரசின் திட்டங்களை போல காட்டி வருகிறார். கேரளாவின் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் இடமாக தமிழகம் மாறி வருகிறது. இதனை முதலமைச்சர் தட்டி கேட்பதில்லை.
காரணம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால் கூட்டணியில் பிளவு வந்துவிட கூடாது என்பதற்காக மவுனம் காக்கிறார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகை அணை தூர்வாரப்படவில்லை. கண்ணகி கோவிலை கேரளாவிற்கு தாரை வார்த்துவிட்டனர்.
சனாதனம் குறித்து பட்டத்து இளவரசர் உதயநிதி புதிய தத்துவம் கூறி உள்ளார். கோவிலில் எவ்வாறு சாமி கும்பிட வேண்டும் என இவர்கள் சொல்லி தர தேவையில்லை. ஏற்றத்தாழ்வு, சாதிய பாகுபாடு இருக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சனாதனம் பற்றி பேசும் உதயநிதி தனது தாயாரை கோவிலுக்கு செல்ல கூடாது என கூற முடியுமா?
அதனால்தான் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர். சென்னையில் இருந்து ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு என முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தி.மு.க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
விடுதலை செய்யப்பட்ட பல தி.மு.க அமைச்சர்களின் வழக்குகள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் எந்தெந்த சிறையில் இருப்பார்கள் என்பது தெரியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் இவ்வாறு அவர் பேசினார்.
3ஆம் நாள் பயணமாக இன்று தேனி நகர் பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து பங்களா மேடு வரை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.