ஆணுக்கும் சம உரிமை தேவையில்லையா?: வைரலாகும் விவாதம்..

By 
ammk7

'இன்று சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை என்கிற ஓட்டத்தில், ஆண் சமூகத்தை ஓரங்கட்டும் நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை' என அரசியல் விமர்சகரும் கவிஞருமான கே.எஸ்.கோனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது கருத்துரை வருமாறு:

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில்.. நிக்சன் 'மாஸ்க்' கேட்டதற்கு, மாயா தனது உள்ளாடையை மாஸ்க்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நக்கலடித்தது இன்று ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது.

ஒரு விஷயத்தை இந்த சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் ஆணும் பெண்ணைப் போலவே மென்மையானவன்  தான். அவனுக்கும் உணர்ச்சி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். 

இன்று சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை என்கிற ஓட்டத்தில், ஆண் சமூகத்தை ஓரங்கட்டும் நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்த பிரச்சினையை நாம் பல பல கோணங்களில் பார்க்கலாம். இன்று பெண்களுக்கு சம உரிமை என்கிற பாதையில்.. பெண்களுக்கு சம உரிமையை தாண்டி  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. ? உரிமைக்கும் முன்னுரிமைக்கும் வித்தியாசம் உள்ளது. இது வரக்கூடிய காலங்களில் பெரிய பேதத்தை உருவாக்கும் என்பதும் உண்மைதான். 

ஒரு விஷயத்தை சொல்கிறேன்; ஒரு பெண் ஒரு வேலையில் சேர்ந்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக எடுத்துக் கொள்வோம். அந்த பெண் அந்த சம்பளத்தை விட குறைவாக வாங்கும் ஆணை திருமணம் செய்து கொள்வாரா? ஏதாவது ஒரு சில இடங்களில் இது நடந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் அந்தப் பெண் அவரைவிட அதிகமான சம்பளம் வாங்கும் ஆளைத்தான் தேடுகிறார்கள். இன்று சம உரிமை என்ற பெயரில், பெண்களுக்கு முன்னுரிமை பெறுவது சரியா என்பதை நாம் பார்க்க வேண்டும். 

அரசியலில் கூட இன்று பெண்களுக்கு சம உரிமை என்கிற பெயரில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது. அதே சமயத்தில் அரசியலில் கடுமையாக உழைக்கிற ஆண்கள் தனது உரிமையை இழக்கிறார்கள் என்பதை யார் குறிப்பிடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இது போன்ற உரிமைகள் சமூகத்தில் பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது. 

உண்மையில், இப்படி இட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு வாய்ப்பு தரப்படும்போது உண்மையிலேயே அரசியலில் உழைக்கும் பெண்களை விட்டுவிட்டு எம்எல்ஏ, கவுன்சிலர் குடும்பத்தில் உள்ளவர்களை அந்த பதவியில் போட்டு விடுகிறார்கள் இது எந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?

சம உரிமை என்கிற பெயரில், முன்னுரிமை கொடுத்து ஆண்களை எல்லா இடத்திலும் ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில் எந்தவித முரண்பாடும் எனக்கில்லை. 

இந்த கட்டுரையை நான் எழுதுவது மூலம், பெண்ணியத்திற்கு எதிரானவர் என்று என்னை யாரும் எண்ணிவிட வேண்டாம். ஆனால், சமூகத்தில் நடக்கிற தவறான அபிப்பிராயங்கள் ஒரு சமூகத்தை கெடுத்து விடும் என்பதை கூறுவது ஒரு எழுத்தாளரின் கடமை என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். இந்த கருத்தில் பெரும்பாலான பெண்களும் உடன்படுவார்கள் என்றுதான் கருதுகிறேன்.

எனவே, ஆண்களையும் ஒரு சம உரிமை உள்ள மனிதனாகவே பாருங்கள். அவனுக்கும் உணர்ச்சிகள் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவனையும் கண்ணியத்தோடு நடத்துங்கள். அவனுடைய பங்கு குடும்பத்தில் மிக இன்றியமையாதது என்பதை உணருங்கள். 

இது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையும் சிறந்த பாதையில் கொண்டு செல்லும் என்பதை உணருங்கள். நான் இதை பெண்களுக்கு மட்டும் சொல்லவில்லை. எல்லாவற்றிற்கும் அரசியலுக்காக பெண்களை சப்பை கட்டும் ஆண்களுக்கும்தான் சொல்கிறேன்.

இவ்வாறு அரசியல் விமர்சகரும் கவிஞருமான கே.எஸ்.கோனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 


 

Share this story