ஒருவரை ஒருவர் பாராட்டும்போது அரசியல் கலக்காதீர்கள் : பாராளுமன்றத்தில், பிரதமர் மோடி உரை
 

By 
p75

இன்று 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடின. வழக்கமான கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதற்கு பதில் பாராளுமன்ற 75 ஆண்டு கால வரலாறு பற்றிய விவாதம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் மீது தலைவர்கள் பேசினார்கள். முதலில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சில கோரிக்கைகளை தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பாராளுமன்ற மக்களவையில் அமளி நிலவியது. உறுப்பினர்கள் அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். என்றாலும் சுமார் 10 நிமிடங்கள் கூச்சல்-குழப்பம் நிலவியது. அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

இந்த வரலாற்று கட்டிடத்தில் இருந்து நாம் விடைபெறுகிறோம். நாம் புதிய கட்டிடத்துக்கு செல்லும் முன் இந்த பாராளுமன்ற கட்டிடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ளவேண்டிய நேரம் இது. விடுதலைக்கு பிறகு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பாராளுமன்றமாக செயல்பட்டு வருகிறது. பொன்மயமான வரலாற்று பயணத்தில் இந்த கட்டிடம் செயல்பட்டதை நினைவு கூர்வோம்.

ஒவ்வொரு இந்தியர்களின் வியர்வையாலும், பணத்தாலும் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம், அறிவியலோடு இணைந்த புதிய பாதை தொடங்கி இருக்கிறது. சந்திரயான்-3 வெற்றி நாட்டின் மீது புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிபெற செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் புகழ் இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்படுகிறது. பாரதத்தின் கூட்டாட்சி மனோபாவத்துக்கு கிடைத்த வெற்றி இது.

140 கோடி இந்தியர்களின் உறுதியின் வலிமையை சந்திரயான்-3 வெற்றி பறைசாற்றுகிறது. ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு அனைவராலும் கொண்டாடப் படவேண்டிய ஒரு விசயம். ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு விடை அளித்துள்ளது. ஜி20 மாநாட்டு வெற்றி தனிநபருக்கானது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது.

புதிய பாராளுமன்றத்திற்கு மாறும் இந்த தருணத்தில் இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறவேண்டும். உலக நாடுகள் நம் பாரத நாட்டை நண்பனாக பார்க்கின்றன. இந்த அவையில் நகைச்சுவை, காரசாரமான விவாதங்கள், சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழையும் இந்த தருணத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வோம். பாரதத்தின் வளர்ச்சிக்கு இந்த கட்டிடம் அடித்தளம். முதல்முறையாக பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தபோது படியில் தலையை வைத்து வணங்கினேன்.

ஒரு ஏழை இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் நுழைய முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாராளுமன்றம் பிரதிபலிக்கிறது. பாராளுமன்றத்தில் பெண்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.பி.க்களாக செயல்பட்டுள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தினரை போல அன்பை பரிமாறிக் கொள்ளவேண்டும். கடும் நோய் பாதிப்பு, சர்க்கரை பாதிப்பு இருந்தபோதும் உறுப்பினர்கள் பலர் அவைக்கு வந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் அவைக்கு வரும்போது முக கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தோம். கொரோனா காலத்திலும் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை முடக்க நாம் அனுமதிக்கவில்லை. மைய மண்டபத்தை உறுப்பினர்கள் கோவிலை போல கருதி வந்ததை நாம் பார்த்துள்ளோம். இந்த அவையின் தாக்கத்தால் நமது வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளோம்.

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த அவை கட்டிக்காத்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக பாராளுமன்றம் மீது அசைக்கமுடியாத அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு இந்த பாராளுமன்றம் சாட்சியாக திகழ்ந்துள்ளது. நேரு, மன்மோகன் சிங் மற்றும் வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்தார் படேல் போன்ற நாயகர்களை நினைவுகூர  வேண்டிய நேரமிது. ராஜேந்திர பிரசாத் தொடங்கி ராம்நாத் கோவிந்த் வரை பலர் அவைக்கு வழிகாட்டியுள்ளனர். நேரு முதல் மன்மோகன்சிங் வரை நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்ட உழைத்துள்ளனர். சாதாரண மக்களின் குரலை இந்த அவையில் அவர்கள் எதிரொலிக்க செய்தனர். நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா ஆகிய மூவரும் பிரதமராக இருக்கும் போதே உயிரிழந்தது சோகமான தருணம். துணை குடியரசு தலைவர்கள், சபாநாயகர்கள் என பல்வேறு தரப்பினர் அவைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இந்த ஜனநாயக இல்லத்தில் தீவிரவாத தாக்குதலும் நடந்தது. இது பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, நமது ஆன்மா மீதான தாக்குதல். இதை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளுடன் போரிடும் போது சபையைக் காப்பாற்ற உடலில் குண்டுகளை தாங்கியவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். பாராளுமன்ற தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறேன். தீவிரவாத தாக்குதலையும் தாண்டி இந்த கட்டிடம் நிலைத்து நிற்கிறது. பல தடைகளை கடந்து நாம் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்.

சுதந்திரத்திற்குப் பின், நாட்டின் வெற்றி குறித்து பலர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் இந்த பாராளுமன்றம் அதை தவறு என நிரூபித்தது. தோட்ட ஊழியர்கள் உள்பட பாராளுமன்ற பணியாளர்களின் பங்கு, உழைப்பு பாராட்டதக்கது. இந்த அவையின் நடவடிக்கைகளை நொடிக்கு நொடி மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி. பத்திரிகையாளர்களின் எழுதுகோல் அவையின் பல நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்து சென்றன. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு விதத்தில், இங்குள்ள சுவர்களின் வலிமையை அவர்களது பேனா பிரதிபலித்துள்ளது.

இந்த அவையில் இருந்து நான் வெளியேறுவதற்கு எப்படி உணர்ச்சிவசப்படுகிறேனோ, அதேபோன்று அந்த பத்திரிகையாளர்களுக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும். நேரு அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றியவர் அம்பேத்கர். பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் லால்பகதூர் சாஸ்திரி. இதே அவையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவும் இதே கட்டிடத்தில்தான் எடுக்கப்பட்டது.

வங்கதேச போர் வெற்றிக்கு வித்திட்ட இந்திராகாந்தி அந்த பிரகடனத்தை இந்த அவையில் வாசித்தார். பொருளாதார சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க பாடுபட்டது நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி. ஓட்டளிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது இந்த அவை. முன்னேறிய வகுப்பினரில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது இந்த அவை.

ஒரே நாடு ஒரே வரி என்பதை ஏற்றுக்கொண்டது இந்த அவை. வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது இந்த அவையில்தான். வேற்றுமையில் ஒற்றுமையை காண்பிக்கும் விதமாக பல்வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் இங்கு உள்ளனர். அரசியலே வேண்டாம் என இருந்த நரசிம்மராவ் பிரதமராக இந்த அவையை அலங்கரித்தார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடினார்கள்.

அணுசக்தி சோதனை இந்தியாவின் வலிமையின் அடையாளமாக மாறியது. லோஹியா, சந்திரசேகர், அத்வானி உள்ளிட்ட பலர் நமது இந்த சபையை வளப்படுத்துவதிலும், விவாதங்களை வளப்ப டுத்துவதிலும், நாட்டின் சாமானியர்களுக்கு வலுவூட்டுவதிலும் உழைத்தவர்கள். வரலாறு, வருங்காலத்தையும் ஒன்றிணைத்து பார்க்கவேண்டிய தருணத்தில் உள்ளோம்.

ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ளும்போது இதில் அரசியல் கலக்காமல் இருக்க வேண்டும். அருமையான நினைவுகளோடு இந்த அவையில் உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடு புதிய பாராளுமன்றத்துக்கு புதிய நம்பிக்கையுடன் செல்வோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

Share this story