பிரச்சினைய பேசி தீத்துக்குலாம் பெட்ரோல் குண்டுலாம் போட்றாதீங்க: கவர்னர் தமிழிசை

By 
tamilisai9

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் உதய நாள் விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது ஜம்மு காஷ்மீர் லடாக்கின் நடன கலைஞர்கள் பங்கேற்று உற்சாகமாக நடனம் ஆடினார்கள். அவர்களுடன் தமிழிசையும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, புதுச்சேரிக்கு தான் ஆளுநராக வரும் பொழுது மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தது. தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தது. நான் வந்த பிறகு பாதுகாப்பே வேண்டாம் என்று கூறியிருந்தேன். எந்த எதிர்க்கட்சியும் வலியுறுத்தியதின் பெயரில் தடுப்பு கட்டைகள் அகற்றப்படவில்லை. எதிர்க்கட்சி சகோதரர்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் செய்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பு கட்டைகள் இல்லை என்பதற்காக பெட்ரோல் குண்டை வீசி விடாதீர்கள் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, தமிழகத்தில் மசோதாக்கள் நிறைவேற்றுவது தொடர்பாக  கருத்து வேறுபாடு உள்ளது. தமிழக முதலமைச்சரும், ஆளுநரும் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணலாம். சண்டை போட்டுக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. 

தெலங்கானாவிலும் இதைத்தான் வலியுறுத்தினேன். முதலமைச்சர் வரட்டும் பேசட்டும் என்று எப்போதும் கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது மாநிலத்தில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கருத்து ஒற்றுமைகள் இருக்க வேண்டும். அது புதுச்சேரியில் இருக்கின்றது. அதைப்போல் பார்த்துக்கொள்வேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் மத்திய மருத்துவக்கவுன்சில் விதிமுறைகளை மீறி காலதாமதமாக மருத்துவக் கலந்தாய்வு நடத்தி சேர்ந்த மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். மத்திய அரசு தீர்வு காணும் என நம்புவதாக தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.

Share this story