3 பேர் பதவியை பறிக்க, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்: சபாநாயகர் நிராகரித்ததால் வெளிநடப்பு..

By 
three

ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்காததால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கும்படி இதுவரை 10 முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், எங்களது கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு "இருக்கை ஒதுக்கீடு என்பது எனது தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. பதவி நீக்கம் தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது. உறுப்பினர்கள் எந்த கட்சியின் சின்னத்தில் வெற்றி பெற்று அவைக்கு வந்தார்களோ, அவர்களை அந்த கட்சியின் உறுப்பினர்களாகத்தான் நான் பார்ப்பேன்" என்றார்.

இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாயநாகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் கருத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share this story