ரத்து செய்ய வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

By 
mkseps

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமுறையாவது தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏதேனும் பேசினார்களா?

சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்களிலாவது ஈடுபட்டார்களா? 2019-ல் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்ற விவரங்களை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிடத் தயாரா? 

2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது 520-க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது கட்சியினரும், தமிழக மக்களை ஏமாற்றிவிட்டதாக மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள்; சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைக்குப் பிறகும் சிறையில் உள்ள ஒருவர் இலாகா இல்லாத அமைச்சர்; ஊழல் பணமான 30,000 கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுதல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அனைத்து ஊடகங்களிலும் அணிவகுத்து வெளிவந்த போதும், தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறிதும் 'நா' கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்' அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தின்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்று, சுமார் 57 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பது திமுக அரசின் பித்தலாட்டத்திற்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

'தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக்கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் என வாக்குறுதி அளித்தீர்கள். மாணவர்களின் கல்விக்கடனை திருப்பிச் செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா தி.மு.க. அரசின் முதலமைச்சரே?

இந்த தி.மு.க. ஆட்சியை நம்பி, கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில், கல்விக் கடனை திருப்பிச் செலுத்தக்கோரி வங்கி அதிகாரிகள் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் (ஜப்தி போன்ற) ஈடுபட நேரிடும் என்று மிரட்டியதாக, கல்விக்கடன் வாங்கிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.

2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.

நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் தி.மு.க. அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா? சட்ட மன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.




 

Share this story