ஆகஸ்ட் 1 ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடியும் பங்கேற்கலாமே : ஓபிஎஸ் தரப்பு அழைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை ஒப்புதலோடு தரப்பட்ட கொடநாடு பங்களாவுக்கான தடையில்லா அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பை, கொலை கொள்ளை சம்பவத்துக்கு ஏதுவாக.. மின் துண்டிப்பு செய்திட உத்திரவிடும் அளவுக்கு சக்திவாய்ந்த அதிகார பீடம் ஒன்று முதலமைச்சராக இருக்க வேண்டும்; இல்லை என்றால் மின்துறை அமைச்சராக இருக்க வேண்டும் என்ற பலரது கருத்துக்கு பதில் என்ன?
ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்த ஒரு முன்னாள் முதலமைச்சரது பங்களாவுக்கு அளிக்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பும், அங்கே போடப்பட்டிருந்த பேரிகார்டுகளும், கொலை கொள்ளை சம்பவம் நடப்பதற்கு சில தினங்கள் முன்பாக அகற்றப்பட்டது என்றால்.. இதற்கான உத்தரவையும் ஒரு சாதாரண கடைநிலை அதிகாரத்தால் செய்ய இயலாது அல்லவா..
அப்படியென்றால், அந்த உத்தரவுக்கான குரல் யாருடையதாக இருக்கும்? அதுபோலவே, பாதுகாப்பு காரணங்களுக்காக கொடநாடு பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை கொலை கொள்ளை சம்பவத்துக்கு உதவியாக செயலிழப்பு செய்ய உத்தரவிட்டது யார்?
எத்தனையோ மரணங்களுக்கு எல்லாம் உதவித்தொகை அறிவித்து பெருமை தேடிக்கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கோடநாடு பங்களாவின் பாதுகாவலர் ஓம்பகதூர் மற்றும் சி.சி.டி.வி. மேற்பார்வையாளர் தினேஷ் உயிரிழப்புகளுக்கு கட்சியின் சார்பில் நிவாரணம் வழங்காதது ஏன்? குறைந்த பட்சம் இரங்கல் அறிக்கைகூட வெளியிடாதது ஏன்?
இநதச் சம்பவம் குறித்து, அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, ஒரு தனியார் பங்களாவுக்கு அரசு எவ்வாறு காவல்துறை பாதுகாப்பு அளிக்கமுடியும் என அதிர்ச்சியூட்டும் பொறுப்பற்ற பதிலை எடப்பாடி சொன்னது ஏன்?
மேலும்..கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம்பகதூர் தொடங்கி, கார் ஓட்டுநர் கனகராஜ், சி.சி.டி.வி. மேற்பார்வையாளர் தினேஷ், சயானின் மனைவி அவர்களது பெண் குழந்தை என பல உயிர்கள் மர்மமாக செத்துப்போனாலும்..
சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவில் இருந்து காயங்களோடு தப்பித்துப்போன கண்ணால் கண்ட சாட்சியாகிய கிருஷ்ணபகதூரை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்காமல், ஒரு குதிரை பொம்மையும் இரண்டு கடிகாரங்களும் காணாமல் போனதாக திருட்டு வழக்குப்பதிவு செய்து அவசர அவசரமாக வழக்குக்கு மூடுவிழா எடுக்க முயற்சித்தது ஏன்?
வழக்கமாக மாலை ஆறுமணிக்கு பிறகும், காலை ஏழு மணிக்கு முன்பும் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு பனிமூட்டம் மிகுந்த மலைவாசஸ்தலமான கொடநாட்டில் கொலை கொள்ளை நடத்தியவர்கள், நள்ளிரவிலேயே கீழே இறங்க முயற்சித்தபோது காவல்துறை சோதனைச் சாவடியில் பிடிபட்டதாகவும் அப்போது அவர்களை விடுவிக்க அதிகாரப் பிரமுகர் ஒருவர் காவல்துறைக்கு உத்தரவிட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட அந்த அதிகார "அவர்" யார்?
கொடநாடு பங்களாவுக்கான அனைத்து மரவேலைப்பாடுகளை செய்த கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுஜீவன் மீது சந்தேக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களிலேயே கட்சியில் மாநில அளவிலான உயர் பதவி வழக்கப்பட்டது ஏன்?
இவை யாவுக்கும் மேலாக தமிழகத்தில் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளிகள் அத்தனை பேரும் தங்களை வந்து சந்தித்து பேரம் பேசியதாக சேலம் இளங்கோவன் மீது குற்றம் சுமத்திய நிலையில், அந்த இளங்கோவனுக்கு..
தான் இருபதாண்டு காலமாக தன்வசம் வைத்திருந்த மாவட்டச் செயலாளர் பதவியை அவசரம் அவசரமாக தாரை வார்த்தது ஏன்?
இவை யாவுக்கும் மேலாக எடப்பாடியும் அவரது சகாக்களும் கொடநாடு என்ற சொல்லையே உச்சரிக்கக்கூட தயங்குவது ஏன்?
இந்த இரண்டரை வருட சட்டமன்றத்தில் ஒரே ஒரு முறைகூட கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் பொறுப்பு வகிக்கும் எடப்பாடியோ அவருக்கு ஆலவட்டம் வீசும் அவரது அடிவருடிகளோ பேசவில்லையே ஏன்?
எது எதற்கோ போராட்டங்களை நடத்திய எடப்பாடி கம்பெனி கொடநாடு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக்கோரி எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாதது எதற்காக?
இப்படியாக..புதைந்து கிடைக்கும் மர்மங்களுக்கு விரைந்து விடை காண தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் வலியுறுத்தவே ஆகஸ்ட் 1-ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இப்போராட்டத்தில், மடியில் கனமில்லை என கருதினால் எடப்பாடியும் கலந்துகொள்ளலாம். முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, கொங்கு மண்டல பவர் ஸ்டார் வேலுமணி உள்ளிட்ட சகலரும் பங்கேற்கலாம்.
சரி.. எப்படியோ இந்திய தேசத்துக்கே விடுதலையை பெற்றுக் கொடுத்த ஆகஸ்ட் திங்கள்.. இந்த கொடநாடு மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பதற்கான விடையாக அமையட்டும்..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.