தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே ‘நான்’ இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம் 

By 
spv3

தமிழகத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக – பாஜ கூட்டணி முறிவு அதிமுக தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிமுக நிர்வாகிகளில் ஒரு சிலருக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும், ஒரு சிலருக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பாஜக வை ஆதரிக்கும் அணி, பாஜ கூட்டணியை ஏற்காத அணி என 2 அணிகள் இயங்கி வந்தது.

சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பாஜகவால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போவதாக கூறி வந்தனர். அதேசமயம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பாஜக  கூட்டணியை ஆதரித்து வந்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி நெருக்கடி நிலையில் இருந்து வந்தார்.

இதற்கு உதாரணமாக, மகாராஷ்ராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியை பாஜ உருவாக்கியதுடன், அவருக்கு முதல்வர் பதவியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே எஸ்.பி.வேலுமணி என சமூக வலைதளங்களில் பாஜக ஐடி விங்க் மறைமுகமாக தகவல் பரப்பி வந்தனர். காரணம், எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பாஜ தலைமை நினைத்தால் அவர் மீது எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வரும் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “நான் என்றென்றும் அதிமுக காரன்” என்று அதிமுக சார்பில் நடந்த சைக்கிள் பேரணி படத்தை பதிவிட்டு வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நான் பாஜவுக்கு ஆதரவாக செயல்பட மாட்டேன், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி உள்ளதாக வேலுமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான் பாஜவுக்கு ஆதரவாக செயல்பட மாட்டேன், தொடர்ந்து எடப்பாடிக்கு விசுவாசமாக இருப்பேன்' என தெரிவிக்கிறார்.

Share this story