அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் போட்ட அவசர உத்தரவு..

By 
eps5

சேலத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்களுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று தடுத்து, அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் திருச்சியில் தொடங்கியது. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஈபிஎஸ் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாகச் சென்று ஈபிஎஸ் வாக்கு சேகரித்தபோது, அதிமுகவினர் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களைத் துண்டு பிரசுரங்களாக வழங்கினர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றம் அதிமேக வேட்பாளர் பி.விக்னேஷ் ஆகியோருக்கு சில பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து வரவேற்றனர். அப்போது பி. விக்னேஷ் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க தனது சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுக்கப் போனார்.

இதைப் பார்த்துப் பதறிப்போன ஈபிஎஸ் சட்டென்று விக்னேஷின் கையைப் பிடித்துத் தடுத்தார். "கூடாது... கூடாது... பாக்கெட்ல பணமே வைக்கக்கூடாது... சும்மா விளையாட்டுத்தனமாக பண்ணாத" என்று கண்டிப்புடன் சொல்லி பணம் கொடுப்பதைத் தடுத்துவிட்டார். ஆரத்தி எடுப்பதற்குப் பணம் கொடுத்தால் நாம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக சர்ச்சை உருவாகிவிடும் என்றும் கூறி விளக்கியுள்ளார் ஈபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவி வருகிறது. பொதுவாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு தட்டில் பணம் போடுவது வழக்கம். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சியினர் அதைத் திசை திருப்பி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக புகார் கூறுவார்கள் என்றும் ஈபிஎஸ் அட்வைஸ் செய்துள்ளார்.

சேலத்தில் நடந்த இந்த ஆரத்தி சம்பவத்துக்குப் பின், அதிமுகவினர் தேர்தல் முடியும் வரை சட்டை பாக்கெட்டில் பணமே வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஈபிஎஸ் உத்தரவு போட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 

Share this story