ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்: நீதிமன்றம் அதிரடி..

By 
opseps9

அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என தனித்து செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2022ம் ஆண்டு ஜூலை17ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயக்குமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியும் நியமித்துள்ளதாக சபாநாயருக்கு கடிதம் அனுப்பியும், ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியுதாகவும், அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் இருப்பதால், எதிர்க்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், கட்சியினரால் திறமையாக  செயல்பட முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கி அங்கீகரிக்க கோரி 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு டிசம்பர் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சட்டமன்ற செயலாளர், சபாநாயகருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

Share this story