நீட் தேர்வுக்கு விலக்கு : பேரவையில், புதிய மசோதா தாக்கலானது

By 
Exemption from NEET Examination In the Assembly, the new bill was tabled

தமிழகம் முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது.

1,11,000 மாணவ-மாணவியர் :

நாடு முழுவதும் 202 நகரங்களில் 3 ஆயிரத்து 860 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். என்றாலும், நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

சட்டசபைக் கூட்டம் :

இந்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ராஜன் குழுவினர் அறிக்கை :

அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு :

நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது.

கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.

சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து மாணவர்களையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து, பாதுகாக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல அம்சங்கள் :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த மசோதாவில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றித் தரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்த மசோதாவை ஆதரிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது, சட்டமன்றக் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். 

நீட் தேர்வால் மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையும், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பட்டியலையும் முன்னுதாரணம் காட்டி, இனி நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

ஜனாதிபதி ஒப்புதல் :

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா நிறைவேறியது. 
இந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 

அதன்பிறகே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா? என்பது உறுதியாகும்.

Share this story