விவசாயிகளை கொலை செய்த வழக்கு : விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அமைச்சரின் மகன்..

By 
Farmer murder case Son of minister refuses to co-operate in probe

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் 4 விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றது தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவரைக் கைது செய்வதற்கு, போலீசார் முயன்றபோது தலைமறைவாகி விட்டார். 

இதையடுத்து, உடனடியாக ஆஜராகும்படி அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால், ஆஜராகவில்லை. இதையடுத்து 2-வது சம்மன் ஒட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆசிஷ் மிஸ்ரா நேற்று லக்கிம்பூர் மாவட்ட போலீசார் முன்பு ஆஜரானார். 

அவரை தனி இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். 12 மணிநேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

ஆனால், ஆசிஷ் மிஸ்ரா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக போலீசார் கூறினார்கள். தகவல்களை மறைக்கும் வகையில் ஒரேவார்த்தைகளை திரும்பத்திரும்ப சொன்னதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நீண்டநேரம் விசாரணை நடத்திய பிறகும், அவர் போலீசுக்கு சரியான ஒத்துழைப்பை தரவில்லை என்றும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து, வேறு வகையில் இன்று விசாரணை நடத்த இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

கோர்ட்டு அவருக்கு ஜாமீன் எதுவும் வழங்காத பட்சத்தில், ஆசிஷ் மிஸ்ரா ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story