'வெள்ளப் பாதிப்பு' நடவடிக்கைகள் : கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

'Flood Vulnerability' Activities Chief Stalin's Instruction to Collectors

தமிழகத்தில், நாளை (25-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா கூறியிருக்கிறது.

குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளனர்.

ஏற்கனவே, 2 காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அதிக மழை பெய்து வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. இப்போது, உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மிக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதால், பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் :

எனவே, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் பேசினார். 

அப்போது, மழை சேதத்தை தடுக்க என்னென்ன முன்எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த மாதிரி மீட்பு பணிகளை செயல்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அறிவுறுத்தல் :

வெள்ளம் ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு வரவேண்டும். அவர்கள் தங்குவதற்கு உரிய இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

மழை நீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், ஆறு, ஓடைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆகியவற்றால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து அந்த இடங்களில் மீட்பு குழுக்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தேவையான இடங்களில் மணல் மூட்டைகள் மற்றும் மீட்பு சாதனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் என்னென்ன முன்ஏற்பாடுகளை செய்து இருக்கிறீர்கள் என கேட்டறிந்து அவற்றை ஆய்வு செய்தார்.

ஏற்கனவே, 2 காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக மழை பெய்து தமிழகத்தில் பூமி முழுவதும் தண்ணீராக காட்சி அளிக்கிறது. இனி சற்று கனமழை பெய்தாலும் கூட அது பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அதை எதிர் கொள்வதற்கு முழு அளவில் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
*

Share this story