இந்தியாவில் முதல் முறையாக, 'தடய மரபணு தேடல் மென்பொருள்' : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

By 
 For the first time in India, 'forensic genetic search software' Chief Minister Stalin released

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் டி.என்.ஏ. பிரிவில் 'தடய மரபணு தேடல் மென்பொருள்' உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது :
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள “தடய மரபணு தேடல் மென்பொருள்” வெளியிட்டார்.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றாற் போல் பெருகிவரும் பல்வேறு குற்றங்களையும், சட்ட சிக்கல்களையும் அறிவியல் பூர்வமாக துல்லியமாக தீர்க்கும் பணியில் தமிழ்நாடு தடய அறிவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 

இத்துறையின் 14 பிரிவுகளில் ஒன்றான டி.என்.ஏ. பிரிவு, வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப உதவியுடன் மனிதனின் டி.என்.ஏவில் காணப்படும் கைரேகை போன்று தனித்துவமிக்க பகுதியின் துணை கொண்டு பெற்றோர், குழந்தைகள் மரபு வழி தொடர்புகளை கண்டறிதல், 

அடையாளம் தெரியாத பிரேதங்களை மரபணு மூலம் கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்தல், கொலை, கற்பழிப்பு மற்றும் கொலை, கொலை முயற்சி சார்ந்த வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிதல், குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் கண்டறிதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலை நாடுகளில், மரபணு தொழில்நுட்பத்துடன் கணினி தொழில் நுட்பத்தையும் இணைத்துள்ளதன் மூலம், அதன் திறன் பன்மடங்காக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கணினி வழி டி.என்.ஏ தேடல் தொழில் நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை. தற்போது தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் டி.என்.ஏ. பிரிவில் “தடய மரபணு தேடல் மென்பொருள்” உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்தொழில் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இப்புதிய “தடய மரபணு தேடல் மென்பொருள்” மூலமாக, கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு மூலம் உரிய பெற்றோருடன் ஒப்படைத்தல், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், 

கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிதல், இயற்கை பேரிடர்களால் உயிரிழந்த நபர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள இயலும்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ். ரகுபதி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், 

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விசுவநாதன், தடய அறிவியல் துறை இயக்குநர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story