மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கைது..

By 
rpu1

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15 முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கு 45 ஆயிரம் ஏக்கர் மற்றும் மேலூர் ஒரு போக பாசனத்திற்கு 85 ஆயிரம் ஏக்கர் மற்றும் திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கு 19,500 ஏக்கர் தண்ணீர் திறக்க மூன்று பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருமங்கலம் பிரதான கால்வாய் மேலூர் மற்றும் 58 கிராம பாசன கால்வாய்-க்கு உடனடியாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30க்கும் மேற்பட்டோர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து மழை பெய்த போதும் போராட்டத்தை கைவிடாமல், கொட்டும் மழையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட முறை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி மனு கொடுக்த்ம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும், ஆளும் திமுக அரசு தண்ணீரில் அரசியல் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அனுமதியை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உட்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Share this story