விவசாயிகளுக்கு, நிவாரண உதவிகள்-இலவச வீட்டுமனை பட்டா : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார

By 
For Farmers, Relief Aid-Free Housing Patta Presented by Chief Stalin

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக, அதிகளவில் பெய்து வருகிறது.

கடந்த மாதம், 25-ந்தேதி பருவமழை தொடங்கிய நாளில் இருந்து 2 வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல், அதி கனமழை வரை பெய்தது.

சென்னையில், இயல்பைவிட அதிக மழை பெய்ததால், நகரமே மழை வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

இன்று பெரும்பாலான பகுதிகளில், வெள்ள பாதிப்பு சீராகி விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகள் :

தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து, மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னையை போன்றே டெல்டா மாவட்டங்களிலும் மிக பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 1½ லட்சம் ஏக்கர் பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. 

இதனால், கடன் வாங்கி விவசாய தொழிலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.

அந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அமைச்சர்கள் குழு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். 

இதைத் தொடர்ந்து, அவரும் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக, மழை பாதித்த டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்தார். இதற்காக, நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் சென்று தங்கினார்.

இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு சென்றார். அங்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர், அங்கிருந்து பெரியகங்கணாங்குப்பம், கடலூர், கடலூர் துறைமுகம், குள்ளஞ்சாவடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.

ஆய்வு :

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்ய தொடங்கினார். 

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. கெடிலம், தென் பெண்ணையாறு, மணிமுக்தா நதி, மலட்டா ஆறு, வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடலூர் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் ஆனது. 

விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இலவச வீட்டுமனை பட்டா :

முதலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட மாருதி நகருக்கு சென்று, மழையால் பாதித்த வீடுகளை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது சந்திரா, ஜெயலட்சுமி, அம்சாயாள், சந்திரா, ஜெயஸ்ரீ, சுபா, சீலா, செல்வி, இலக்கியா, சாந்தி, சரோஜா, ஜோதி, கிருஷ்ணவேணி, மலர்விழி, உமா, செல்வி, பழனியம்மாள், புஷ்பவள்ளி ஆகிய 18 பெண்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். 

ஒவ்வொருவருக்கும் தலா ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் அளவுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.

அதன் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடூர்அகரம் பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கிய வயல் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை விவரித்தனர்.

வீடுகளை இழந்து பரிதவித்த ராஜகுமாரி, சுலோச்சனா, ரமேஷ், கிருஷ்ணவேணி, பார்வதி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். 

அதுபோல கால்நடைகளை பறிகொடுத்த ரஞ்சிதா, ராஜசேகரன், அம்சாயாள், கவிதா, தெய்வசிகாமணி ஆகிய 5 பேருக்கு நிவாரண உதவிகள் கொடுத்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 500-க்கு நிவாரண உதவிகளை அந்த இடத்தில் அவர் வழங்கினார்.

அதன் பிறகு சிதம்பரம் சென்று காலை சிற்றுண்டி சாப்பிட்டார். 
பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் புத்தூர் கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டார். 

அங்கு ஏராளமான ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. அவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர், சட்டநாதன்புரம், தென்னக்குடி வழியாக தரங்கம்பாடிக்கு சென்றார். அங்கு கேசவன்பாளையத்தில் சுனாமி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
*

Share this story