போக்குவரத்து நடைமுறை விதிகளில் இருந்து, பெண்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்படுமா?

By 
tt11

வாகனங்கள் ஓட்டும் பெண்களுக்கு போக்குவரத்து விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான கவிஞர் அ.திருமலை வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக் காவல் துறையினர் தினந்தோறும் போக்குவரத்துச் சோதனை என்ற பெயரில் மக்களை வாட்டி வதைத்து வருகிறார்கள்.

குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களிடம், வேறு ஏதாவது (லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஷுரன்ஸ்) ஒரு காரணம் சொல்லி கட்டாய அபராதம் விதிக்கிறார்கள்.

கணவன் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டி வரும்போது பின்னால் உட்கார்ந்து இருக்கும் பெண்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அந்தப் பெண்களுக்கும் கட்டாய அபராதம் வசூலிக்கிறார்கள். இது போன்று காரை தனியாக ஓட்டி வரும் பெண்களிடமும் கட்டாய அபராதம் வசூலித்து பெண் வாகன ஓட்டிகளை போக்குவரத்துக் காவல் துறையினர் துன்புறுத்தி வருகிறார்கள்.

பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அவசர கதியில் வேலைக்குச் செல்வார்கள்; இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். போக்குவரத்து வசதிகளை கடைப்பிடிப்பது என்பது பெண்களுக்கு இயலாத ஒன்று; பெண்களை தாயாக மதிக்கும் தமிழகத்தில் போக்குவரத்து காவல் துறையின் நடவடிக்கைகள் பெண்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தி உள்ளது.

சட்டப்படி போக்குவரத்து பெண் காவல் அதிகாரி இல்லாமல் பெண்களிடம் சோதனை செய்யக் கூடாது என்று தெரிந்தும்  போக்குவரத்துக் காவல் துறையினரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட சோதனைகளால் பெண்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதில், தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி போக்குவரத்து நடைமுறை விதிகளில் இருந்து பெண்களுக்கு   விதிமுறைகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து தமிழக பெண்களுக்கு போக்குவரத்து நடைமுறை விதிகளில் இருந்து விலக்கு அளிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுத்து பெண்கள் அன்றாட வாழ்வில் அனுபவித்து வரும் துயரங்களில் இருந்து விடுதலை பெற உரிய வழிகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
மேற்கண்டவாறு கவிஞர் அ.திருமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story