ஒமைக்ரானை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் : அமைச்சர் தகவல்
 

Government of Tamil Nadu ready to face Omicron Minister informed

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், ‘கூட்டம் கூடுவதை தவிருங்கள். கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே நடமாடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல், ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால், எதிர் கொள்ளத் தயாராக இருக்கும்படி, சுகாதாரத் துறையினருக்கும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

அவர்களில், 7 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்கள். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். 

ஏதாவது அசவுகரியமாக தெரிந்தால், உடனே ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சையில் இருப்பவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.

ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று கூறப்படுவதால், ஒருவேளை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால், அதை, எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது.

இரண்டரை லட்சம் படுக்கைகள் :

அரசு மருத்துவமனைகளில் 1¼ லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும், கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது போல் சிறப்பு மையங்களும் தயார்படுத்தப்படுகிறது. இந்த மையங்களிலும் 

1¼ லட்சம் பேரை தங்க வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 2½ லட்சம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி :

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. 

ஆனால், அதன் பிறகு முதலமைச்சரின் நடவடிக்கையால் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.

ஒமைக்ரானை பொறுத்தவரை, தொற்று ஏற்பட்டாலும் நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் பிரச்சினை போன்ற கோளாறுகள் யாருக்கும் ஏற்படவில்லை.

எனவே, ஆக்சிஜன் தேவை என்பது மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக வராது என்று கருதுகிறோம்.

இருப்பினும், ஆரம்ப கட்டத்தில் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 1,400 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே வராது.

அரசின் வழிகாட்டு நெறிகளை பொதுமக்கள் கடைபிடித்தால் போதும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தி விட முடியும். 

எல்லோரும் ஒத்துழைத்தால், ஒமைக்ரானை எளிதாக கடந்து செல்ல முடியும்' என்றார்.
*

Share this story