கவர்னர் என்பவர் வில்லன் அல்ல : திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் படிக்க சென்ற கோவையை சேர்ந்த ஜீவந்த் என்ற என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் சில நாட்களுக்கு முன்பு கோவை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஜீவந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று கோவை வந்தார். அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து ஜனாதிபதிக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தை பார்த்த போது, அதில் உள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது. அவர் எழுதிய கடிதமானது வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாக எழுதப்பட்ட கடிதமாகவே பார்க்கப்படுகிறது.
அந்த கடிதமானது முதலமைச்சரின் இயலாமையை தான் காட்டுகிறது. தமிழகத்தின் உண்மையான நிலைமைய பிரதி பலிக்கும் விதமாக அவரது கடிதம் இல்லை. முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடியில் பார்த்து தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது.
இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். அந்த வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளது. இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவதை விட்டு விட்டும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை ஆற்றாமலும், எப்போது பார்த்தாலும் கவர்னர் என்ன சொல்கிறார். அதில் என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்பதிலும், அவரை சீண்டி பார்ப்பதிலுமே தங்களது நேரத்தை தி.மு.க. அரசானது செலவிட்டு வருகிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற நிலை என பல பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் அதனை எல்லாம் இந்த அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அதற்கு மாறாக தங்கள் கட்சியினர் செய்யக் கூடிய தவறுகளை மறைக்க அனைத்து பழிகளையும் தூக்கி கவர்னர் மீது போட்டு வருகிறார்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கவர்னர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை முதலமைச்சர் மற்றும் அவரது கட்சியினர் தவறு என்று சொல்கின்றனர். இது தொடர்பாக விவாதிப்பதற்கு நேரம் இருக்கிறது. அப்போது நாம் அது பற்றி பேசிக் கொள்ளலாம்.
அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, கவர்னரை சந்தித்து அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீக்க வலியுறுத்தியது ஏன்? அப்போது மட்டும் கவர்னருக்கு அதிகாரம் இருந்தது. தற்போது அவருக்கு அதிகாரம் இல்லையா? தி.மு.க.வினர் ஏதோ செந்தில்பாலாஜி என்னவோ ஒரு உத்தமர் போலவும், அவரை ஒரு புத்தர் போலவும், தமிழகத்தை காக்க வந்த சேவகராவும் கூறி வருகின்றனர். முதலமைச்சர் எழுதிய கடிதத்திலும் செந்தில்பாலாஜியை புத்தராக நினைத்து அதில் கருத்துக்களை தெரிவித்து அனுப்பி இருக்கின்றனர்.
தாங்கள் செய்யக் கூடிய தவறுகள் அனைத்தையும் மறைப்பதற்காக கவர்னரை ஒரு வில்லனை போல காட்ட தி.மு.க.வினர் முயற்சித்து வருகிறார்கள். தி.மு.க.வினர் கவர்னருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பதில்லை. எப்போதுமே தி.மு.க.வினர் கவர்னரை ஒருமையில் பேசுவது, தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற செயல்களிலேயே ஈடுபட்டு வருகிறார்கள். முதலில் அவரது பதவிக்கு மரியாதை கொடுத்து பேசுவதற்கு தி.மு.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் கற்று கொள்ள வேண்டும்.
கவர்னரிடம் தாங்கள் என்ன கொடுக்கிறோமோ அதனை கொடுப்பதை அப்படியே படித்து விட வேண்டும் என தி.மு.கவினர் நினைக்கின்றனர். இவர்கள் கொடுப்பதை மட்டுமே படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. அவர் எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதனை எல்லாம் தவிர்த்து விட்டு படித்து இருக்கிறார். தி.மு.க. சொல்வதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது. ஜி.யு. போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததிலும் சில பிழைகள் இருக்கத்தான் செய்கிறது. இதில் மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகிறது.
கவர்னர் அவருக்கான கருத்துக்களை சொல்லவும், பேசவும் உரிமை உள்ளது. அவர் என்ன பேச வேண்டும். என்ன பேசக்கூடாது என்பதை நாம் சொல்லக்கூடாது. அவர் கலாசாரத்தை பற்றியும், பண்பாட்டை பற்றியும் பேசுவதற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. அதனை அவர் பேசலாம். அதேசமயம் கவர்னர் அரசியல் பேசக்கூ டாது என்பது எனது கருத்து. சிதம்பரம் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என கூறுகிறார்கள். அது எப்படி முடியும்.
தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பது தான் விவாதமே தவிர இதற்கு எப்படி கவர்னர் பொறுப்பாவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடே கவர்னரை பற்றிய இந்த கடிதம்.
மற்றபடி அவர் தமிழகத்தின் உண்மையான நிலைமையை அந்த கடிதத்தில் விளக்கவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க இந்தியா முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.