ஆர்.எஸ்.பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்..

By 
ravi11

நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது.

மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

அத்துடன், காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், பேசும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தமிழகத்தில் உள்ள ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற வகையிலேயே செயல்படுகிறார். எத்தனையோ ஆளுநர்களை பார்த்திருக்கிறோம்.

ஆனால், இந்த ஆளுநர் வேண்டும் என்ற வம்பு சண்டைக்கு இழுக்கிறார். தமிழக அரசு  அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்திட மறுத்து வருகிறார். நாகலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அந்த ஊரைவிட்டே விரட்டி அடித்தார்கள்.

தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. நான் ஒரு உதாரணத்துக்காக கூறுகிறேன். நாகலாந்துக்காரர்கள் நாய்கறி உண்பார்கள். நாய்கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை ஓட ஒட விரட்டியடித்தார்கள் என்றால், உப்பு போட்டு சோறு உண்ணும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்" என்று பேசுகிறார்.

Share this story