முன்னாள் எம்எல்ஏ பகிரங்க மன்னிப்புக் கேட்க உயர் நீதிமன்றம் உத்தரவு..

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதற்காக பொதுக் கூட்டத்தைக் கூட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க, அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் காவல் துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது பேச்சுக்காக சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிவிட்டேன். ஆனால், அதன்பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.