அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது : விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு, சீமான் பதில்..

By 
seemann

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்திக் கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் கூறினார்.

வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன்.யாரும் தன்னை கட்டாய படுத்தியோ, மிரட்டியோ இந்த வழக்கை வாபஸ் பெறவில்லை. நானாக தான் வாபஸ் பெறுகிறேன்.

சீமானிடம் இது குறித்து பேசினேன். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நான் தொடர்வதாக இல்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை. புகார் அளித்த தன்னை மட்டுமே அசிங்கப்படுத்தி வந்தனர். சீமான் மீது காவல்துறையிடம் அளித்த புகார் குறித்து விசாரணை தொய்வாகவே இருந்தது. சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்.”என்றார்.

இந்நிலையில், சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான்,

" நிறைய பொய்கள் சொல்லும்போது அதை ஒரு பொய்யாக கூறிச் சென்றுள்ளார். நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார். விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவு செய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை? சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது" என்றார். 

Share this story