ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவேன்.! - நீதிமன்றத்தில், அண்ணாமலை அதிரடி வழக்கு.. 

By 
rsp7

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 66 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது சந்தேகம் உள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மனதில் கொண்டு கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்கப்பட்டிருக்கலாம் என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் என்னை தொடர்பு படுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதியின் கருத்தால் நான் மனவேதனை அடைந்துள்ளேன். இதற்கு நஷ்ட ஈடாக அவர் 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகிறது. 3 ஆண்டுகளில் நான் யார் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தது கிடையாது.

முதல் முறையாக ஆர்.எஸ்.பாரதி மீது தாக்கல் செய்துள்ளேன். ஆர்.எஸ்.பாரதி என்னை ஏற்கனவே சின்ன பையன் என்று கூறினார். இந்த வழக்கில் சின்ன பையன் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள். இந்த விவகாரத்தில் பாரதியிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. அவ்வாறு வசூலிக்கப்படும் பணம் கள்ளக்குறிச்சியில் விஷசாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

சிபிஐ விசாரணையை தொடங்கினால் முதல்வரின் குடும்பத்தில் பலர் சிறை செல்ல நேரிடும். இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழகத்தில் சிபிஐக்கு எதிரான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் ஒட்டுமொத்த டாஸ்மாக்கையும் விசாரணை செய்ய வேண்டும். டாஸ்மாக்கிற்கு மதுபானம் விநியோகம் செய்பவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பயந்து தான் திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story