அமைச்சர் உதயநிதி நினைத்தால், ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைப்பது நிச்சயம்: அரசியல் விமர்சகர் அ.திருமலை 

By 
erasai1

'ஸ்ரீமதி வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வைராக்கியத்துடன் செயல்பட்டால் மட்டுமே, குற்றவாளிகளை இந்த உலகுக்கு அடையாளப்படுத்தி நீதியை நிலை நாட்ட முடியும் என்று தமிழக மக்கள் நம்புகின்றனர்' என அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான கவிஞர் அ.திருமலை தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது கருத்துரை வருமாறு: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளிக்கூட மாணவி ஶ்ரீமதி மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், முதல்வர் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரைப் பின் தொடர என்னால் இயலவில்லை. எனவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்க முடிவு செய்தேன்.
        
தற்போது, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல் ஸ்ரீமதியின் அம்மா திருமதி. செல்வி அவர்களிடம் வழங்கப்பட்டது; அதை அவர் தனது வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்து விட்டார்.
         
வழக்கறிஞர்கள் குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த பிறகு சிசிடிவி நகல்கள், எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டிருந்த 5 நபர்களின் தொலைபேசி உரையாடல் ஒலி பிரதிகள் ஆகியவற்றை நீதிமன்றம் மூலம் சிபிசிஐடி போலீசாரிடம் கேட்டிருந்தார்கள்.

காவல்துறை தொடர்ந்து அவகாசம் கேட்டு வருகிறார்கள்; நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்து வருகிறது. வழக்கில் கோட்டை விட்டதையே யாரும் கண்டு கொள்ளவில்லை; இதையா கேட்கப் போகிறார்கள் என்று சிபிசிஐடி போலீசார் இருந்திருக்கலாம். இனி, எல்லா ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற நெருக்கடி சிபிசிஐடி போலீசாருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில்தான் ஆட்சியாளர்களின் உதவி வழக்கிற்கு தேவைப்படுகிறது; குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இதுவரை திமுக ஆட்சி சார்பில் எந்த உதவியும் ஸ்ரீமதி குடும்பத்துக்கு கிடைக்கவில்லை.

அதற்கான சூட்சுமம் என்ன? என்பது உதயநிதி அவர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் இனியாவது உதயநிதி அவர்கள் ஸ்ரீமதி வழக்கிற்கான உதவிகளை செய்வதில் வேகம் காட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்;
            
உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வருங்கால அரசியல் தனக்கான அரசியல் காலம் என்பதை உற்று நோக்கி, தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் ஸ்ரீமதி வழக்கிற்கு தேவையான உதவிகளை உதயநிதி அவர்கள் செய்து கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், தற்போதுள்ள ஆதாரங்களை வைத்துக்கொண்டு மறு விசாரணைக்கு உத்தரவிடலாம். அதற்கான அதிகாரம் உதயநிதி அவர்களுக்கு  இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்;
           
நம்மிடம் அதிகாரம் இருக்கும்போதுதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். மத்திய அரசு என்ற எலிக்குப் பயந்து கொண்டு கோட்டையைக் காலி செய்ய முடியுமா? இதுவரை மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் யாரும் திமுக ஆட்சியை  மிரட்டி பணிய வைத்த வரலாறு கிடையாது. இனியும் அது நடக்காது என்பதில் திமுகவினர் உறுதியாக இருக்கிறார்கள்!

ஸ்ரீமதி வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வைராக்கியத்துடன் செயல்பட்டால் மட்டுமே, குற்றவாளிகளை இந்த உலகுக்கு அடையாளப்படுத்தி, நீதியை நிலை நாட்ட முடியும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். புலி எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும் என்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீமதி வழக்கில், அவரது குடும்பத்துக்கு வெற்றி கிடைத்து விட்டால், அதுவே வருங்கால திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு படிக்கட்டுகளாக அமைந்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இவ்வாறு அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான கவிஞர் அ.திருமலை தெரிவித்துள்ளார்.
 

Share this story