'நோபல் பரிசு' கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்:எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 

By 
epsmks

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அடிப்படை ஆதாரமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  

பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது.

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் பேசும்போது, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்தார். அதனால்தான், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அவற்றின் நிலை என்ன என்று நான் கேட்டேன். மேலும், கடந்த 29 மாத கால விடியா திமுக ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் பாதிப்புகளை நீக்க விடியா திமுக அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சட்டமன்றத்திலும், ஊடகங்களிலும் கூறி வருகிறேன்.

அம்மா அரசில் தொடங்கப்பட்டு, தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சில முக்கியத் திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன மானியம், பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தும், 

மாநில நிதியில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் உட்பட ஓராண்டுக்குள் நிறைவேற்றி இருக்கக்கூடிய பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் இன்றுவரை இழுத்தடித்துக் கொண்டிருப்பது என்று தமிழக மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் திரு. ஸ்டாலின்.

மேலும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருமுறை மின் கட்டண உயர்வு; சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு; குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டண உயர்வு; பால் பொருட்கள் விலை உயர்வு; அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு; நில வழிகாட்டி மதிப்பு உயர்வு; பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு என்று தமிழக மக்கள் அனைவரது தினசரி வாழ்வையே புரட்டிப் போட்ட நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் பதவியேற்ற 29 மாத கால ஆட்சியில் நிர்வாக ரீதியாக படுதோல்வியை சந்தித்து மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியதை நான் ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கிறேன். இதற்கு திரு. ஸ்டாலின் அவர்களின் பதில் என்ன?

அடுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; அதிகரித்து வரும் போதை கலாச்சாரம்; போதைப் பொருள் விற்பனை; 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் அதிக அளவு போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக சீர்கேடு; தமிழகமெங்கும் சர்வ சாதாரணமாக கூலிப் படையினர் போட்டி போட்டுக்கொண்டு, பொது வெளியில் கொடூர ஆயுதங்களால் கொலை செய்தல்; வழிப்பறி; நகை பறிப்பு; திமுக நிர்வாகிகள் காவல் துறையினரை மிரட்டுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொழில் துறையினரை மிரட்டும் வீடியோக்கள்; நில அபகரிப்பு;

தனியாக வசிக்கும் முதியவர்கள் கொடூரமாகத் தாக்கப்படுதல் / கொலை செய்யப்படுதல் மற்றும் அவர்களது சொத்துக்களை கொள்ளையடிப்பது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் ஆகிவிட்டது. தமிழக மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறிய தமிழகக் காவல்துறை - இதற்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களின் பதில் என்ன ?

ஆட்சிப் பொறுப்பேற்ற 29 மாத காலத்தில் விவசாயப் பெருமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், பெண்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கெட்டப் பெயரை சம்பாதித்துள்ள நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதலமைச்சர், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் ஆவார்.

திரு. ஸ்டாலின் அவர்களது குடும்ப ஊழல் பெருமையைப் பற்றி, அப்போதைய நிதியமைச்சர் பேசிய ஒலி நாடா சமூக ஊடகங்களில் வெளிவந்ததை வசதியாக மறந்துவிட்டார். மேலும், ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்ற இலாக்கா இல்லாத அமைச்சரை, சென்னை உயர்நீதிமன்றமே தார்மீக ரீதியாக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்தும், ஊழல் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்காதது கேலிக்கூத்தாக உள்ளது.

திரு. ஸ்டாலின் திருவண்ணாமலையில் அவரது கட்சியினரிடம் பேசும்போது, என்னை பச்சைப் பொய் பழனிசாமி என்று பேசியுள்ளார். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் திரு. ஸ்டாலின். பொய் பேசுவதில் 'நோபல் பரிசு' கொடுப்பதாக அறிவித்தால், திரு. ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எங்களுடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவற்றையும்,

அம்மாவின் அரசால் ஆரம்பிக்கப்பட்ட, நடைபெற்று வந்த மற்றும் முடிவுற்ற பணிகளையும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டட மருத்துவக் கல்லூரிகளையும், புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், தமிழக நகரங்களில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகளையும் தான் திரு. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

திரு. ஸ்டாலினிடம், உங்களது 29 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், அதைப் பற்றி பேசாமல், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களிடையே பொய் பேசுகிறார். ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக திரு. ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை.

தான் வகிப்பது பெருமை மிக்க முதலமைச்சர் பதவி என்பதை மறந்து, என் மீதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் பாய்ந்து பிறாண்டியிருப்பது, 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்' என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Share this story