இதை செய்யாவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் : முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு  

By 
cmmks1

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருவதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் வர இயலவில்லை. நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி வந்திருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

திராவிட கட்டட கலையுடன் நவீன வசதிகளோடு கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியை நாடு போற்றும் தலைவராக்கிய ஊர் திருவாரூர்.

அண்ணாவை, கருணாநிதி முதன்முறையாக சந்தித்தது திருவாரூரில்தான். என் தந்தைக்கு, என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாக கலைஞர் கோட்டத்தை கருதுகிறேன். கலைஞர் கோட்டம் என்பது அவரது பரிணாமங்களை சொல்லும் கருவூலம்.

பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் நிதிஷ் குமார் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நானும் பாட்னா செல்கிறேன்.

ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தை காக்கவேண்டிய நெருக்கடியான காலத்தில் நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும்.

பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் இந்திய நாட்டிற்கும், இந்தியாவின எதிர்காலத்திற்கும் கேடாக முடியும். வெற்றி வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ, செயல்பட்டு வெற்றியை பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் இந்திய அளவில் ஏற்பட்டாகவேண்டும்.

வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத்தான் பீகாரில் நடைபெற உள்ள கூட்டம் அமையவிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

Share this story