சென்னையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி..

In Chennai, Chief Minister Stalin provided relief aid to the people affected by the floods.

சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

அதன் பின்னர், சேப்பாக்கம் எழலக வளாகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கட்டுப்பாட்டு மையத்துக்கும் சென்று வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார்.

அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2-வது நாளாக ஆய்வு :

2-வது நாளாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரம் பகுதிகளில் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமுக்கும் சென்றார்.

நிவாரண உதவிகள் :

பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதன்பிறகு, வடசென்னை பகுதிகளான ராயபுரம், ஆர்.கே.நகர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.

ராயபுரம் தொகுதியில் பாரத் திரையரங்கம் ரவுண்டானா பகுதியில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின் அப்பகுதியில் உள்ள தொப்பை வளாக கோவில்தெருவில் உள்ள கால்வாயை பார்வையிட்டார்.

இதன் பிறகு, பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முல்லைநகர் பாலம் மற்றும் கால்வாயை பார்வையிட்ட அவர் எம்.கே.பி.நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, வெள்ள மீட்பு பணிகளை விரைவுபடுத்த மீண்டும் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
 

Share this story