ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள்; சிபிஐயிடம் வழக்கை ஒப்படையுங்கள்- மாயாவதி ஆவேசம்..

By 
bsp7

வட சென்னையின் முக்கிய நபராக திகழ்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன் தினம் இரவு சென்னை பெரம்பூரில் அவரது புதிய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல இடங்களில் போராட்டமும் நடத்தப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். தனது அண்ணன் ஆற்காடு சுரேஷை கொலை செய்த உதவியதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  ஆற்காடு சுரேஷன் தம்பி ஆற்காடு பாலு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.  

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட பள்ளிக்கு சென்றவர் அங்கு மலர் மாலை வைத்து மாயாவதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இதனை தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர், புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் சென்றவர் ஆம்ஸ்ட்ராங்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து போலீசார் கண்டறிய வேண்டும்.

பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு தீவிரமாக செயல்பட்டு இருந்தால் குற்றவாளிகளை கண்டுபிடித்து இருக்கலாம். மாநில அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என மாயாவதி கேட்டுக்கொண்டார். 

Share this story