அரசியல் களத்தில், சீமான் - விஜய் கூட்டணியா?

லியோ படத்தின் வெற்றி விழாவில், “கப்பு முக்கியம் பிகிலு.” என்று விஜய் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அரசியலுக்கு வரும் கனவு விஜய்க்கு இருக்கிறதென்றால் அதை வாழ்த்த வேண்டும். ஒருத்தருடைய முதுகுக்கு பின்னாடி நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கு. தட்டி கொடுக்கிறது தான். அதனால் தம்பியை தட்டி கொடுப்போம். அவ்வளவு தான் நாம் செய்ய முடியும் என்று சீமான் கருத்து தெரிவித்தார்.
முன்னதாக, லியோ வெளியீட்டு சர்ச்சையிலும் விஜய்க்கு ஆதரவாக சீமான் பேசியிருந்தார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறனர். அந்த வகையில், சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பாக்கியராசன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அக்கட்சியினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதையடுத்து, சீமான் - விஜய் கூட்டணி அமையப்போவதாகவும், புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன, ஆனால், அதற்கு சீமான் பாணியில் சொல்வதென்றால் இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா என்றுதான் சொல்ல வேண்டும்.
சீமானை பொறுத்தவரை அவர் சினிமா துறையில் இருந்து வந்திருந்தாலும், சினிமாவிலிருந்து வருபவர்களை கடுமையாக எதிர்க்கக் கூடியவர் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரது ரசிகர்கள், அவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்தான் ஓட்டளிப்பார்கள். கொள்கை, கோட்பாட்டை பார்த்து தான் மற்றவர்கள் அவருடன் கைக்கோர்ப்பார்கள். எனது கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான்” என சீமான் ஏற்கனவே கூறியுள்ளார்.
எனவே, அவரது கொள்கைக்கு புறம்பாக அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்யுடன் அவர் கூட்டணி அமைப்பார் என்பது சந்தேகமே. அத்துடன், இதுவரை அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்து களம் காண்பதில்லை. இதுவே அவருக்கு ஒரு ப்ளஸ்தான். எனவே, தற்போதைய அரசியல் நிலவரப்படி, விஜய்யுடன் சீமான் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும், மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நிகழ்வில், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிங்க என்று தனது கொள்கையை நடிகர் விஜய் தெளிவாக கூறிவிட்டார். ஆனால், பெரியாரை கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்கள் நாம் தமிழர் கட்சியினர். சீமானும் பெரியாருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். எனவே, தமது கொள்கைக்கு முரணான ஒருவருடன் விஜய் கூட்டணி அமைப்பாரா என்பதும் சந்தேகமே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.