பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக, இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்.! - கார்கே பேச்சு 

By 
karke1

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று (ஜூன் 5) மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே,

மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் சிறந்த முறையில், ஒற்றுமையுடன் செயல்பட்டதாக தெரிவித்தார். “ம்க்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராகவும் அவரது அரசியல் முறைக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

நமது அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மாண்புகளையும் அதன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான அடிப்படை உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் அனைத்து கட்சிகளையும் இண்டியா கூட்டணி வரவேற்கிறது.

எங்கள் கூட்டணிக்கு அமோக ஆதரவை தந்த இந்திய மக்களுக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள். பாஜகவுக்கும் அவர்களின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்களின் தீர்ப்பு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.

இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் க்ரோனி கேபிடலிசத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான தீர்ப்பாகும். மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்” இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Share this story